தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை வைத்திருந்த 3 உணவகங்களுக்கு அபராதம்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை வைத்திருந்த 3 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
குழித்துறை,
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை வைத்திருந்த 3 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அதிகாரிகள் நடவடிக்கை
குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில் நகராட்சி பணியாளர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதிகளில் உள்ள 3 உணவகங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தி அவற்றில் சாம்பார், ரசம், மோர் போன்றவைகளை கட்டி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள் அழித்ததுடன், பிளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்தனர்.
இதனால் அந்த கடை உரிமையாளர்களுக்கும் சோதனை செய்ய சென்ற நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே பலத்த வாக்குவாதம் நடந்தது. இதுபற்றி நகராட்சி ஆணையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே நகராட்சி ஆணையாளர் ராம திலகம் தலையிட்டு வாக்குவாதம் செய்த உணவக உரிமையாளர்களை நகராட்சி அலுவலகத்துக்கு வரவழைத்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று கூறியதுடன் தொடர்ந்து அவ்வாறு செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
மேலும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 3 உணவகங்களுக்கு மொத்தம் ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.