புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
கம்மாபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
கம்மாபுரம்
கம்மாபுரம் பகுதியில் உள்ள அரசகுழி, முதனைரோடு, இருளக்குறிச்சி மற்றும் பொன்னாலகரம் டோல் கேட் ஆகிய பகுதிகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாண்டியராஜூ தலைமையில் புகையிலை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு புகையிலை தடுப்பு சட்ட விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் கடைகளில் அயோடின் கலந்த உப்பு மட்டுமே விற்பனை செய்யுமாறு கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு நல கல்வி அளிக்கப்பட்டது.
இதையடுத்து 3 கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை கண்டறிந்து கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.600 அபராதம் விதித்தனர். மேலும் புகையிலை பொருட்கள் குறித்த விளம்பர பலகைகளையும் அகற்றினர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோவன், கலியபெருமாள், விஜயகுமார், ரஞ்சித்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.