சரக்கு லாரிக்கு அபராதம்
உரிய அனுமதியின்றி இயக்கப்பட்ட சரக்கு லாரிக்கு அபராதம்
கும்பகோணம்:
கும்பகோணம் பைபாஸ் சாலை பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேற்று முன்தினம் மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட ஒரு சரக்கு லாரியை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் சரக்கு லாரியில் அளவை விட கூடுதலாக பாரம் ஏற்றி வந்ததும் உரிய அனுமதி இல்லாமல் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்தில் சரக்கு லாரியை ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை அந்த சரக்கு லாரியை சிறைபிடித்து கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தினார். மேலும் அந்த சரக்கு லாரியை வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்தில் இயக்கியதற்காக வரியாக ரூ.11 ஆயிரத்து 950-ம், அளவைவிட அதிக பாரம் ஏற்றி வந்ததற்காக ரூ.55 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.