தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம்-தொழிலாளர் துறை நடவடிக்கை


தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம்-தொழிலாளர் துறை நடவடிக்கை
x

தமிழில் பெயர் பலகை வைக்காத மற்றும் பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தராத நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

மதுரை


தமிழில் பெயர் பலகை வைக்காத மற்றும் பணியாளர்களுக்கு இருக்கை வசதி செய்து தராத நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

தமிழ் பெயர் பலகை

தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள், கடைகள் மற்றும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தொழிலாளர் கமிஷனர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, மதுரை மண்டல தொழிலாளர் கூடுதல் கமிஷனர் ஜெயபாலன் வழிகாட்டுதலின் படி, இணை கமிஷனர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்த உதவி கமிஷனர்கள் (அமலாக்கம்) தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, 275 கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், தமிழில் பெயர் பலகை வைக்காத 127 கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் 6 ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவன விதிகள் 1948-ன் படி, தமிழ்நாடு உணவு நிறுவனத்தின் விதிகள் 1959-ன் படி பெயர் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் முதலில் வருமாறும், ஆங்கிலம் மற்றும் இதர மொழி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கு கீழும் வருமாறு இருக்க வேண்டும்.

பிற எழுத்துக்களை விட தமிழ் எழுத்துக்கள் தெளிவாக இருக்க வேண்டும். இதனை பின்பற்றாத கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய ஆய்வில் நடவடிக்கை எடுக்கப்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்களில் உடனடியாக பெயர் பலகை மாற்றாவிடில் கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் பெயர் பலகை குறித்து வர்த்தக நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

இருக்கை வசதி

அதேபோல, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947-ன் படி, பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தராத கடைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் விதிகளை பின்பற்றாத 44 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள், நிறுவனங்கள் குறித்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர்களிடம் (அமலாக்கம்) புகார் தெரிவிக்கலாம். மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 0452 2604388 என்ற எண்ணிலும், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 04562 252130 என்ற எண்ணிலும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 04575 240521 என்ற எண்ணிலும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 04567 221833 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.


Next Story