பாதாள சாக்கடையில் திடக்கழிவு, மழை நீரை வெளியேற்றினால் அபராதம்
பாதாள சாக்கடையில் திடக்கழிவு, மழை நீரை வெளியேற்றினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ராமநாதபுரம் பாதாள சாக்கடை கட்டமைப்பு குழாய்களில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் திடக்கழிவுகளால் ஆய்வுக்குழிகளில் அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே கழிவுநீர் வெளியேறி சுகாதாரகேடு ஏற்படுகிறது. இதனை தடுக்க குடியிருப்பு, வணிக நிறுவனங்களில் முறையான தடுப்பு தொட்டி அமைத்து திடக்கழிவுகள் பாதாள சாக்கடை கட்டமைப்பில் சேராதவாறு கழிவுநீரை மட்டும் வெளியேற்ற வேண்டும். மேலும் குடியிருப்பு, வணிக கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தி சேரும் மழை நீரை நிலத்திற்கு அடியில் சென்றடையுமாறு விட வேண்டும். இதற்கு மாறாக பாதாள சாக்கடை திட்ட கட்டமைப்பிற்குள் மழை நீரை விடக்கூடாது. இதுதொடர்பாக நகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனர். விதிகளை மீறி திடக்கழிவுகள் மற்றும் மழை நீரை பாதாள சாக்கடை அமைப்பிற்குள் விடுவது தெரிய வந்தால் பாதாள சாக்கடை இணைப்பை துண்டிப்பதுடன் அபராதம் விதிக்கப்படும் என்று ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், ஆணையாளர் அஜிதா பர்வீன் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.