ஓசூர் வனப்பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டினால் அபராதம்


ஓசூர் வனப்பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டினால் அபராதம்
x
தினத்தந்தி 5 July 2023 1:00 AM IST (Updated: 5 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:-

ஓசூர் வனஉயிரின காப்பாளர் கார்த்திகேயனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓசூர் வனக்கோட்டமானது இயற்கை வளங்கள் நிறைந்ததாகவும், அதிக அளவிலான வன உயிரினங்களை கொண்டும் காணப்படுகிறது. இங்குள்ள காப்பு காடுகளில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், ஊராட்சி சாலைகள் செல்கின்றன. இதன் வழியாக தொடர்ச்சியாக வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் காப்பு காடுகளுக்கு அருகில் நகரங்கள், கிராமங்கள், குடியிருப்புகள் கடைகள் உள்ளன. காப்பு காடுகளுக்கு அருகில் உள்ள சிலர், கோழி இறைச்சி கழிவுகள், மாமிச கழிவுகள் மற்றும் இதர கழிவுகளையும், காப்புக்காடுகளில் வீசி செல்கின்றனர். இதனால் வன பகுதி மாசடைவதுடன், சிறுத்தைகள் உள்ளிட்ட மாமிச உண்ணிகள், மாமிச கழிவுகளை தேடி வரும் ஆபத்துள்ளது.

குறிப்பாக, ஓசூர் அருகே உள்ள சானமாவு காப்புக்காடு மற்றும் மேலுமலை, கரியாகப்பள்ளி காப்புக்காடுகள் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் ஓரம் அதிகளவிலான கழிவுகளை பொதுமக்கள் வீசி செல்கின்றனர். இவ்வாறு சானமாவு காப்புக்காடு பகுதியில் கடந்த 6 மாதங்களில் சாலையோரம் கழிவுகளை கொட்டியதற்காக 12 வனக்குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.23 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வருங்காலங்களில் இதுபோல் இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள், உரக்கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றின் காப்புக்காடுகளில் சாலையோரம் கொட்டினால், சம்பந்தப்பட்ட நபர்கள் பல வனப்பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story