தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு அபராதம்
சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரம் எடுக்க முடியாது என்று கூறியதால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு அபராதம் விதித்து தேனி நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
சேமிப்பு கணக்கு
தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர் ராஜன். இவர் உத்தமபாளையம் கோர்ட்டில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவர் கூடலூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு அவருடைய உறவினர் ஒருவருக்கு தேனியில் கண் அறுவை சிகிச்சை நடக்க இருந்தது.
இதற்காக அவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரம் எடுப்பதற்காக வங்கிக்கு சென்றார். பணம் எடுப்பதற்கான சீட்டு மூலம் ரூ.60 ஆயிரம் எடுக்க முயன்றார். ஆனால், வங்கியில் ரூ.50 ஆயிரம் மட்டும் தான் பெற முடியும் என்று வங்கி ஊழியர்கள் கூறிவிட்டனர்.
அபராதம்
இதனால், அவர் கடன் வாங்கி மருத்துவ சிகிச்சைக்கு கொடுத்தார். தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரம் எடுக்க முடியாமல் போனது குறித்து அவர் தேனி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தரப்பில் வக்கீல் பாண்டியன் ஆஜரானார்.
வழக்கின் விசாரணையை தொடர்ந்து, நீதிபதி சுந்தர், உறுப்பினர்கள் ரவி, அசினா ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், வங்கியில் பணம் இருப்பு வைத்துள்ள வாடிக்கையாளருக்கு அவருக்கு பணம் தேவைப்படும் போது பணம் தராமல் சேவைக்குறைபாடுடன் நடந்து கொண்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சேவைக்குறைபாட்டுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், மனஉளைச்சலுக்கு ரூ.50 ஆயிரமும், வழக்குச் செலவுக்காக ரூ.10 ஆயிரமும் வங்கிக்கிளை, மனுதாரர் ராஜனுக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.