ஊராட்சி நிர்வாகத்திற்கு அபராதம்
தேனி கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் வனத்துறை பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொண்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சாலையோர புதர்கள்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தார்சாலை உள்ளது. இந்த சாலையின் ஒரு பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான கரட்டுப் பகுதி உள்ளது.
இந்த சாலை சேதம் அடைந்து உள்ளதோடு, சாலையோரம் செடிகள் கொடிகள் வளர்ந்து புதர் மண்டியும், மேடு, பள்ளமாகவும் காட்சி அளிக்கிறது. தினமும் ஏராளமான மக்கள் இந்த சாலையில் நடைப்பயிற்சி செய்து வரும் நிலையில், சாலையோரம் நடைப்பயிற்சி செய்ய சிரமம் அடைந்து வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால், இந்த சாலையோரம் புதர்களை அகற்றி, மேடு பள்ளங்களை சரி செய்யுமாறு வடபுதுப்பட்டி ஊராட்சி நிர்வாகத்துக்கு ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது.
ரூ.5 ஆயிரம் அபராதம்
அதன்பேரில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோர புதர்களை அகற்றி சாலையின் மட்டத்துக்கு சாலையோர பகுதியையும் சமப்படுத்தும் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். இந்நிலையில் பணிகள் நடந்த இடத்துக்கு தேனி வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் வந்து பணிகளை தடுத்து நிறுத்தினர். வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் அனுமதியின்றி பணிகள் செய்வதாகவும், வனத்துறைக்கு சொந்தமான நிலம் சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறி இந்த பராமரிப்பு பணி மேற்கண்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு வனத்துறையினர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு செல்லும் சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதற்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பணிகள் அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, முறையான அனுமதியுடன் பணிகளை முழுமையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நடைபயிற்சி செய்வோரின் கோரிக்கையாக உள்ளது.