கள்ளக்குறிச்சி அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
கள்ளக்குறிச்சி அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தியாகதுருகம்,
கள்ளக்குறிச்சி அருகே பொற்படாக்குறிச்சி, இந்திலி ஆகிய கிராமங்களில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறையினருக்கு புகார் சென்றது. இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர்கள் காமராஜ், தாமோதரன், அரவிந்தன் ஆகியோர் அடங்கிய குழுவினர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொற்படாக்குறிச்சி, இந்திலி ஆகிய கிராமங்களில் 3 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதித்தனர். மேலும் அப்பகுதியில் பொது இடங்களில் புகை பிடித்த 2 நபர்களுக்கு தலா ரூ.100 அபராதமும் விதித்தனர். தொடர்ந்து கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.