அதிவேகமாக சென்ற 25 தனியார் பஸ்களுக்கு அபராதம் விதிப்பு
விழுப்புரம் நகரில் அதிவேகமாக சென்ற 25 தனியார் பஸ்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்
விழுப்புரம்
அதிவேகமாக சென்ற பஸ்கள்
விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கம் மற்றும் விழுப்புரம்- பண்ருட்டி, கடலூர் மார்க்கங்களில் செல்லும் தனியார் பஸ்கள் அதிவேகமாக சென்று விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் அருகே வாணியம்பாளையம் பகுதியில் தனியார் கல்லூரியை சேர்ந்த 2 பஸ்கள் போட்டி போட்டுக்கொண்டு சென்று விபத்து ஏற்படுத்தியதில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதைத்தொடர்ந்து அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார்.
அபராதம் விதிப்பு
அதன்படி விழுப்புரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் கடந்த சில நாட்களாக விழுப்புரம் புதிய பஸ் நிலையம், 4 முனை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தி அதிவேகமாக செல்லும் பஸ்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று 4 முனை சந்திப்பில் நடந்த வாகன சோதனையில் அதிவேகமாக வந்த தனியார் பஸ்களுக்கு அபராதம் விதித்தனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், கடந்த 3 நாட்களில் மட்டும் அதிவேகமாக வந்த தனியார் கல்லூரி பஸ்கள் உள்பட 25 தனியார் பஸ்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன விதிகளின்படி நகரப்பகுதியில் குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக இயக்கினால் வாகனங்களை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.