சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த 3 பஸ்களுக்கு அபராதம் விதிப்பு
சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த 3 பஸ்களுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தக்கலை,
சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த 3 பஸ்களுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அபராதம்
மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் சசி உத்தரவின் பேரில் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு புலியூர்குறிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கேரள ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் சுற்றுலா பயணிகளை ராமேசுவரத்திற்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் நித்திரவிளை பகுதிக்கு வந்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
பின்னர் கேரள பஸ் தமிழகத்தில் இயக்குவதற்கான அனுமதி பெறப்பட்டிருக்கிறதா? என ஆய்வு செய்த போது அதற்கான வரியை செலுத்தாதது தெரியவந்தது. உடனே அபராதமாக ரூ.49 ஆயிரத்து 600 விதிக்கப்பட்டது. மேலும் பஸ்சையும் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
இதனால் பஸ்சில் இருந்த சுற்றுலா பயணிகளை மாற்று வாகனம் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இதேபோல் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த மேலும் 2 ஆம்னி பஸ்கள் மீது மணலிக்கரையில் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த 2 பஸ்களுக்கும் தலா ரூ.49,600 அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ஒரு பஸ்சிற்கான அபராத தொகை உடனே வசூலிக்கப்பட்டது. இன்னொரு பஸ்சிற்கான அபராத தொகை செலுத்தாததால் அதன் ஆவணங்களை வாங்கி விட்டு பயணிகளின் நலன் கருதி சுற்றுலா செல்வதற்கு 2 பஸ்சுகளையும் அதிகாரிகள் அனுமதித்தனர்.
இதேபோல் உள்ளூர் வாகனங்களை சோதனையிட்டதில் ஆவணங்கள் இல்லாதது உள்பட பல்வேறு காரணங்களுக்காக ரூ.34 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என வட்டார ஆய்வாளர் ராஜேஷ் தெரிவித்தார்.