ஊதிய நிலுவைத் தொகை வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்
கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவை தொகையும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்களும், இறந்து போன தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நீதியும், ஓய்வூதிய பலன்களும் வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. சங்க செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். தலைவர் கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் தமிழரசன், பொருளாளர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட நிர்வாகிகள் ரவீந்திரன், மாரியப்பன், ராமானுஜம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். போராட்டத்தில் ஊதிய நிலுவை தொகையை அனைவருக்கும் உடனடியாக வழங்க வேண்டும். இறந்துபோன தொழிலாளர்களுக்கு குடும்பநல பாதுகாப்பு நிதியுடன் ஊதிய நிலுவை தொகை மற்றும் ஓய்வூதிய பலனை உடனே வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதிய நிலுவை தொகையும், ஓய்வூதிய பலன்கள் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாரிசுதாரர்கள் கலந்து கொண்டனர்.