ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்


ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்
x
தினத்தந்தி 31 July 2023 12:15 AM IST (Updated: 31 July 2023 3:10 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று தூத்துக்குடி கோட்ட தபால் கண்காணிப்பாளர் சு.சுரேஷ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஒப்பந்தம்

மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தபால் துறையின் சார்பில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி நாடு முழுவதும் கடந்த 2018 செப்டம்பரில் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. நாட்டில் உள்ள 1 லட்சத்து 36 ஆயிரம் தபால் நிலையங்களுக்கு வங்கி சேவைகளை விரிவுபடுத்தி, 7 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கி உள்ளது. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தமிழகத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் மூலமாகவும், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பயோமெட்ரிக் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ள 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால்காரர்கள் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலமாகவும், வங்கி மற்றும் இதர சேவைகளை வழங்கி வருகிறது.

தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், 2023 ஜூலை 1 முதல் வீட்டில் இருந்தபடியே, தங்களது உயிர்வாழ் சான்றிதழை, டிஜிட்டல் முறையில் தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், இந்திய தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளது

உயிர்வாழ் சான்று

இந்த ஆண்டு சுமார் 7 லட்சத்து 198 தமிழக அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், ஜூலை 1 முதல் தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்களின் வீடுகளுக்கே சென்று பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து உள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், ஓய்வூதிய கொடுப்பாணை எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், உடனடியாக, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். கடந்த ஆண்டு சுமார் 1.75 லட்சம் தமிழக அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் வீட்டிலிருந்தபடியே, தங்களது உயிர்வாழ் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்ப்பித்தனர்.

பயன்பெறலாம்

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தூத்துக்குடி கோட்டத்தில், 300-க்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் மூலமாகவும், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பயோமெட்ரிக் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ள 450-க்கும் மேற்பட்ட தபால்காரர்கள் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலமாகவும், வங்கி மற்றும் இதர சேவைகளை வழங்கி வருகிறது. எனவே தமிழக அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story