வழித்தட பிரச்சினையில் வெட்டி வீழ்த்தப்பட்ட பனை மரங்களுக்கு விவசாயிகள் அஞ்சலி
பல்லடத்தில், வழித்தட பிரச்சினையில் வெட்டி வீழ்த்தப்பட்ட பனை மரங்களுக்கு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
பல்லடத்தில், வழித்தட பிரச்சினையில் வெட்டி வீழ்த்தப்பட்ட பனை மரங்களுக்கு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
வெட்டப்பட்ட பனைமரங்கள்
பல்லடம் கல்லம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரது மகன் வடிவேல் (வயது 42) விவசாயி. இவரது குடும்பத்திற்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். விவசாய நிலத்தின் வழிப்பாதை அருகே சுமார் 60 ஆண்டுகள், பழமை வாய்ந்த 40-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் இருந்தன. இதன் அருகிலேயே அவரது உறவினர் குடும்பத்தினர் பயன்படுத்தக்கூடிய பொது வழித்தடமும் அமைந்துள்ளது.
இந்த நிலையில் இந்த பொது வழித்தடத்தை அகலப்படுத்துவதற்காக அவர்கள் கடந்த 3-ந்் தேதி பொக்லைன் எந்திரம் மூலம் 60 ஆண்டுகள் பழமையான 36 பனை மரங்களையும் வேரோடு வெட்டி சாய்த்தனர். இது குறித்து வடிவேல் பல்லடம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனை மரங்களுக்கு அஞ்சலி
இந்த நிலையில், வெட்டி வீழ்த்தப்பட்ட பனை மரங்களுக்கு, சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் ஒப்பாரி வைத்து அழுதபடி பனை மரங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சிலர் பனை மரங்கள் வளர்ந்ததையும், அதன் பயன்கள் பற்றியும் கூறியபடி தங்களது வேதனையை வெளிப்படுத்தினார்கள்.
இது குறித்து விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தமிழக அரசு மரங்களை வளர்க்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நன்கு வளர்ந்த 36 பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. பனை மரங்களை வெட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வெட்டப்பட்ட பனை மரங்களுக்கு பதிலாக பத்து மடங்கு பனை மரங்களை நட்டு வளர்க்க அவர்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றனர்.