கோத்தகிரி அருகே இரவு நேரத்தில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம்
கோத்தகிரி அருகே இரவு நேரத்தில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளார்கள்.
கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன. இந்நிலையில் கோத்தகிரி அருகே உள்ள இருப்புக்கல் கிராமத்தில்இரவு நேரத்தில் கரடி ஒன்று சாலையில் உலா வந்தது. அவ்வழியாகச் சென்ற வாகனத்துக்கு வழி விடாமல் சாலையிலேயே சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு ஓடிச் சென்று அருகிலிருந்த தேயிலைத் தோட்டத் திற்குள் புகுந்து மறைந்தது. கரடி சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இரவில் உலா வருவதால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்துள்ளதுடன், இரவு நேரங்களில் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்த்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்திற்கு அருகில் கரடி ஒன்று பெண்ணை தாக்கி பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது மீண்டும் அதே பகுதியில் கரடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் கரடியின் நடமாட்டத்தைக் கண்காணித்து, கரடியை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.