அரசியல் ஆதாயத்திற்காக மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்துகின்றனர்


அரசியல் ஆதாயத்திற்காக மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்துகின்றனர்
x

காவிரி பிரச்சினையில் கர்நாடகா அரசு அரசியல் ஆதாயத்திற்காக மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்துகின்றனர் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர்

திறப்பு விழா

திருவலத்தை அடுத்த ஆரிமுத்தூர் மோட்டூர் ஊராட்சியில் சர்க்கரை ஆலை பஸ் நிறுத்தத்தில் ரூ.11.5 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நிழற்குடை மற்றும் அண்ணா நகர் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு நிழற்குடை மற்றும் ரேஷன் கடையை திறந்து வைத்தார்.

கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கூட்டுறவுத்துறை இணை இயக்குனர் திருகுண ஐயப்ப துரை, காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர் தணிகாசலம், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் ஆதாயத்திற்காக

காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் அரசியல் ஆதாயத்திற்காக மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்துகின்றனர். தமிழக அரசு நியாயப்படி திறந்து விட வேண்டிய தண்ணீர் உரிமையைதான் கேட்கிறது. ஆனால் கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்குகளில் மேகதாது என்ற வார்த்தையை பயன்படுத்தாமல், தற்போது தான் மேகதாது என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர்.

தமிழகத்திற்கு உரிமையான தண்ணீரை கேட்கிறோம். கிட்டத்தட்ட 50 டி.எம்.சி. தண்ணீர் பற்றாகுறையாக உள்ளது. தண்ணீரை எவ்வாறு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை காவிரி மேலாண்மை குழு செய்திருக்க வேண்டும். அதனை அவர்கள் செய்யவில்லை.

கர்நாடகாவுக்கு தண்ணீர் தேவை என்றால் கே.ஆர்.எஸ். அணையிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். மாண்டியாவில் பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்துவது அரசியலுக்காக. நாங்கள் இதனை சட்டப்படி அனுகுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story