குப்பைகளுக்கு தீ வைப்பதால் பொதுமக்கள் பாதிப்பு
சோளிங்கர் நகராட்சி குப்பைகளுக்கு தீ வைப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோளிங்கர் நகராட்சி குப்பைகளுக்கு தீ வைப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குப்பைக்கு தீ வைப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் இருந்து தினமும் 9 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. அவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்காமல் ஜெ.ஜெ. நகர் மலைப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது. இந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் அடிக்கடி தீவைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்றும் குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் இருந்து ஏற்பட்ட கரும்புகையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். உடனடியாக இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
திடக்கழிவு மேலாண்மை திட்டம்
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் நகராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம்பிரிப்பதில்லை. திருத்தணி சாலையில் இயங்கிவரும் திடக்கழிவு திட்டம் பெயர்அளவில் மட்டுமே செயல்படுகிறது. வீடுகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு வகையில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்காமல் ஜெ.ஜெ. நகர் உடையார் பாளையம் மலைப்பகுதியில் கொட்டி விடுகின்றனர்.
இதனால் மழைக்காலங்களில் குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. மர்ம நபர்கள் அடிக்கடி குப்பைகளுக்கு தீ வைத்து விடுகின்றனர். இதில் ஏற்படும் கரும்புகையால் முதியவர்கள், சுவாச கோளாறு உள்ளவர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
எனவே இங்கு குப்பைகளை கொட்டாமல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம்பிரித்து செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.