குமரியில் விளையும் செங்கவருக்கை மாம்பழங்களை வாங்க மக்கள் ஆர்வம்;கிலோ ரூ.150-க்கு விற்பனை
குமரியில் விளையும் செங்கவருக்கை மாம்பழங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குலசேகரம்,
குமரியில் விளையும் செங்கவருக்கை மாம்பழங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செங்கவருக்கை மாம்பழம்
முக்கனிகளில் ஒன்றான மாம்பழங்களில் அல்போன்சா, மனோரஞ்சிதம், மல்கோவா, கிளி மூக்கு, பங்கனபள்ளி, நீலம், இமாம் பசந்தி என எத்தனையோ வகையான மாம்பழங்கள் சந்தைகளுக்கு வந்தாலும் குமரி மாவட்ட மக்களின் முதல் தேர்வாக இம்மாவட்டத்தில் விளையும் செங்கவருக்கை என்ற மாம்பழமே உள்ளது.
அதிக சுவையும் லேசான நார்த்தன்மையும் கொண்ட இந்த மாம்பழங்கள் காய்க்கும் மாமரங்கள் குமரி மாவட்டத்தில் வீட்டுத் தோட்டங்களிலும், பழங்குடி குடியிருப்புகளிலும் அதிக அளவில் காணப்படுகின்றன.
மாவட்டத்தில் இந்த ஆண்டு மாமரங்களில் நிறைய பூக்கள் பூத்த போதும் அவ்வப்போது பெய்த மழையால் பல இடங்களில் பூக்கள் உதிர்ந்து விட்டன. எனினும் மாமரங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மாங்காய்கள் காய்த்துள்ளன. பொதுவாக ஏப்ரல் மாதத்தில் மாம்பழ சீசன் காலம் என்ற நிலையில் தற்போது சந்தைகளுக்கு மாம்பழங்கள் வரத்தொடங்கியுள்ளன. அந்த வகையில் மாத்தூர் தொட்டிப்பாலம், திற்பரப்பு அருவி போன்ற இடங்களிலும் மாம்பழங்களை அதிகளவில் வைத்து விற்பனை செய்ய முடிவதை காணமுடிகிறது.
கிலோ ரூ.150 முதல் விற்பனை
பழக் கடைகளில் பல்வேறு வகையான மாம்பழங்கள் இருந்த போதிலும் செங்கவருக்கை மாம்பழங்களை வாங்குவதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். திருமணமாகி சென்ற மகளைப் பார்க்கச் செல்லும் பெற்றோர், உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வோர்கள் ஆகியோரின் கூடைகளில் செங்கவருக்கை மாம்பழங்கள் இடம் பெறுகின்றன.தற்போது குமரி மாவட்டம் குலசேகரத்திலுள்ள பழக்கடைகளில் செங்கவருக்கை மாம்பழங்கள் கிலோ ரூ.150 முதல் ரூ.180 வரை விற்பனையாகின்றன. பழங்களின் வரத்து மேலும் அதிகரிக்கும் போது விலை குறைய வாய்ப்புள்ளது என்று வணிகர்கள் தெரிவித்தனர்.