தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் கடும் அவதி


தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 1 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே வடிகால் வாய்க்கால் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் காந்தி சிலையில் இருந்து காமராஜர் வீதி வரை சாலையின் இருபுறமும் புதியதாக வடிகால் வாய்க்கால் கட்ட நகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு அப்பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

தற்போது திரு.வி.க. வீதியில் இடதுபுறத்தில் புதியதாக வாய்க்கால் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிக்காக பழைய வாய்க்காலை அடைத்து தூர்வாரி புதியதாக கட்டும் பணிகளும் நடந்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வேறு வழியின்றி அங்குள்ள சாலையிலேயே வழிந்தோடுகிறது.

பொதுமக்கள், வியாபாரிகள் அவதி

இப்பகுதியில் புதியதாக வடிகால் வாய்க்கால் கட்டும் பணியை தொடங்கும்போது கழிவுநீர் செல்ல மாற்று வழியை ஏற்படுத்திவிட்டு பணிகளை தொடங்காததால் கடந்த சில நாட்களாக திரு.வி.க. வீதி முழுவதும் அங்குள்ள சாலையிலேயே கழிவுநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் அத்தியாவசிய தேவைக்காக இவ்வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதுபோல் நகர கூட்டுறவு வங்கி முன்பு கழிவுநீர் சாலையிலேயே ஓடுவதால் வங்கிக்கு செல்ல முடியாமலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பணிகளை விரைந்து முடிக்க...

மேலும் திரு.வி.க. வீதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரினால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு பலவித தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுபற்றி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வாய்க்கால் கட்டும் பணியை விரைந்து முடிக்காததாலும், தங்களுடைய வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள வியாபாரிகள் புலம்புகின்றனர்.எனவே இங்கு வடிகால் வாய்க்கால் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமெனவும், அதுவரை திரு.வி.க. வீதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை தினமும் நகராட்சி வாகனம் மூலம் வெளியேற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story