குடிநீர் வசதி இன்றி பொதுமக்கள் கடும் அவதி
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் வசதியின்றி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்
விழுப்புரம்
குடிநீர் வசதி இல்லை
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட அரசின் அனைத்துத்துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த அரசு அலுவலகங்களுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் பொதுமக்கள், பல கோரிக்கைகள் தொடர்பாக வந்து செல்கின்றனர்.
மேலும் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் குறைகேட்பு கூட்டத்திற்கு பொதுமக்கள் ஏராளமானோர், கோரிக்கை மனு கொடுக்க வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பு மக்களும் தண்ணீர் குடிக்க வசதியின்றி பரிதவிக்கின்றனர்.
பொதுமக்கள் அவதி
தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிற நிலையில் வெயிலின் தாக்கத்தால் சிலர், திடீரென மயக்கமடைந்து விழுந்தாலும், வெளியே சென்று கடைகளில் குடிநீர் கொண்டு வந்து குடிக்க வேண்டிய நிலை உள்ளதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக கலெக்டர் அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை மக்களுக்கு பயன்பாடின்றி வெறும் காட்சிப்பொருளாகவே இருந்து வருகிறது.
இதனால் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் பலர் குடிநீர் கேட்டு பரிதாபமாக அலைந்து திரியும் அவலநிலை நீடிக்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் கலெக்டர் அலுவலகத்தில் காட்சிப்பொருளாக இருந்து வரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரங்களையும் சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.