வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்த முயற்சி
மண்மங்கலத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்த முயற்சி நடந்தது. இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டம் நடத்த முயற்சி
கரூர் மண்மங்கலம், அண்ணாநகர், ராமேஸ்வரப்பட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி நேற்று கரூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினருடன் இணைந்து மண்மங்கலம் வட்டார அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட கூடினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வாங்கல் போலீசார் இங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என கூறினர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தாசில்தார் மூலம் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி பெறப்பட்டது.
பேச்சுவார்த்தை
பின்னர் இந்த பிரச்சினை தொடர்பாக மண்மங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் குமரேசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், வாங்கல் இன்ஸ்பெக்டர் சரவணன், கரூர் கட்டுமான சங்க தலைவர் துரைசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அதிகாரிகள் மண்மங்கலத்தில் இலவச வீட்டுமனைக்கான இடம் உள்ளதா என்று ஆய்வு செய்தும், அப்படி இடம் இல்லையென்றால் கரூரில் இடம் கிடைக்க வழி செய்வதாகவும், இது குறித்து ஏப்ரல் 10-ந்தேதி கூட்டம் நடத்தப்படும் என உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தற்போது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து விட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.