முக்கூடல் பேரூராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை


முக்கூடல் பேரூராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
x

சீராக குடிநீர் வழங்கக்கோரி முக்கூடல் பேரூராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடல் நேரு புது காலனி பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று முக்கூடல் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் பேரூராட்சி அலுவலரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், 'முக்கூடல் நேரு புது காலனியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு குடிநீர் பிரச்சினை உள்ளது. இதுதொடர்பாக பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தும் பலன் இல்லை. தினமும் குறைந்த அளவு தண்ணீர் பள்ளமான பகுதியில் மட்டும் வருகிறது. மேடான பகுதியில் வருவது இல்லை. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் என அனைவரும் தண்ணீருக்காக சிரமப்பட்டு வருகிறோம். மேலும் மதியம் 1.30 மணிக்கும், சில நேரங்களில் மாலை 4 மணிக்கும் குடிநீர் வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோர் வீடுகளில் குடிநீர் பிடிக்க யாரும் இருப்பது இல்லை. கடந்த 6 நாட்களாக சரியாக குடிநீர் வரவில்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளோம். எனவே எங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்று கூறி உள்ளனர்.

இதுகுறித்து பேரூராட்சி தலைவர் ராதா லட்சுமணன் கூறும்போது 'இந்த பிரச்சினையை சரிசெய்ய நாங்கள் தயாரான நிலையில் தொடர் விடுமுறை வந்துவிட்டதால், கடந்த 5-ந்தேதி சரிசெய்து உள்ளோம். இனிமேல் தொடர்ந்து சீராக குடிநீர் வழங்கப்படும். இந்த பகுதியை தவிர அனைத்து பகுதிகளிலுமே மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுகிறார்கள். எனவே மோட்டார்களை பறிமுதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மோட்டார்களை பறிமுதல் செய்யும் பட்சத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் தடையின்றி வரும். மோட்டார்களை பறிமுதல் செய்வதுடன் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்' என்றார்.


Next Story