காடையாம்பட்டியில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓமலூர்:
ஊராட்சி மன்ற அலுவலகம்
ஓமலூரை அடுத்த கொங்குபட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் வெவ்வேறு பகுதிகளில் இயங்கி வந்தன. இவற்றை ஒரே வளாகத்தில் அமைக்க கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. அப்போது கொங்குபட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலேயே கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
ஆனால் கொங்குபட்டியில் இருந்து பெரிய கொம்பா செல்லும் வழியில் கோனையன் கரடு பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. இடம் தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்து ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
தாலுகா அலுவலகத்தை முற்றுகை
ஆனால் கோனையன் கரடு பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் கட்ட பணிகள் தொடங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியுரிமை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நுழைவு வாயிலில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் தமிழரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கோரிக்கை தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து, அதன் பரிந்துரையின் பேரில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
அதனை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மீண்டும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.