கிராமநிர்வாக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ஜோலார்பேட்டை அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கிராமநிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட ஏலகிரி ஏரி உள்ளது. இந்த ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து அதிகாரிகள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஏலகிரி கிராமத்திற்கு உட்பட்ட ஏரி பகுதியில் நீர் நிலை ஆக்கிரமிப்பில் வசித்து வரும் 48 பேருக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் ஏலகிரி ஊராட்சிக்குட்பட்ட காலன் வட்டத்தில் உள்ள 18 குடும்பங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
முற்றுகை
இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் 150 ஆண்டுகளாக வசித்து வரும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க. மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் அருணா, ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஜோலார்பேட்டை நகர செயலாளர் லோகநாதன், அ.தி.மு.க. ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சாந்தி ஜெயராமன், ஆகியோர் தலைமையில் ஏலகிரி கிராமநிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தாங்கள் வசிக்கும் குடியிருப்பை அகற்றாமல் அதிகாரிகள் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் வருவாய் ஆய்வாளர் ரவிமா ராஜன் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் ஏரியை முழுவதுமாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, முழுமையாக அளவீடு செய்த பின்னர் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.