திருத்தங்கல் மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
அடிப்படை வசதிகளை செய்து தர கோரி திருத்தங்கலில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சிவகாசி,
அடிப்படை வசதிகளை செய்து தர கோரி திருத்தங்கலில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
முற்றுகை போராட்டம்
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் உள்ள 24 வார்டுகளில் தேவைப்படும் அடிப்படை பிரச்சினைகளை செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நேற்று மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தினர்.
இதை தொடர்ந்து திருத்தங்கல் மண்டல அதிகாரி என்ஜினீயர் ரமேஷ், சுகாதார அலுவலர் கந்தசாமி ஆகியோர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டனர். அப்போது திருத்தங்கல் பகுதியில் உள்ள 24 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் தேவைப் படுவதாகவும், முதல் கட்டமாக கடம்பன்குளம் கண்மாயில் உள்ள சுடுகாட்டிற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும், கண்ணகி காலனி, எம்.ஜி.ஆர். நகர், தேவராஜ் காலனி, திருவள்ளுவர் காலனி, முத்துமாரி காலனிகளில் பூட்டி கிடக்கும் பெண் கழிப்பறையை உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தோண்டி கிடக்கும் சாலைகளை சீரமைத்து தர வேண்டும். குடிநீர் வினியோகம் செய்யப்படும் நாட்களின் இடைவெளியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சமரசம்
அப்போது அதிகாரிகள் தரப்பில் இருந்து பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் 30 சதவீத பணிகள் தற்போது நடந்து வருகிறது. 40 சதவீத பணிகளுக்கு ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். மேயர் அனுமதி வழங்கியவுடன் பணிகள் தொடங்கும். மீதமுள்ள 30 சதவீத வளர்ச்சி பணிகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று 3 மாதங்களில் செய்து தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.
இந்த சமரசத்தை ஏற்றுக்கொண்ட பொதுமக்களும், கம்யூனிஸ்டு கட்சியினரும் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.