மக்களே உஷார் ...பரிசு கூப்பன் விழுந்திருப்பதாக பணம் பறிக்கும் புதிய மோசடி கும்பல்- போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
பொதுமக்கள் சிக்காமல் இருப்பதற்கு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்து உள்ளர்.
சென்னை,
பரிசு கூப்பன் பணம் மோசடியில் பொதுமக்கள் சிக்காமல் இருப்பதற்கு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்து உள்ளர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சைபர் கிரைம் குற்றவாளிகள் நாள்தோறும் தங்களது குற்றத்தின் வகைகளை மாற்றிக் கொண்டு புது யுக்திகளை கையாண்டு மோசடியில் ஈடுபடுகின்ற னர். தற்போது அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் 9-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பரிசு போட்டி நடத்தியதாகவும், அதில் நீங்கள் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு கடிதம் வீட்டுக்கு அனுப்பப்படுகிறது. அமேசான் இலச்சினையோடு இருக்கும் அந்த கடிதத்தில் ஸ்மார்ட் டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஸ்மார்ட் போன், மடி கணினி, ரொக்க பணம் ஆகியவை பரிசாக விழுந்தி ருப்பதாக குறிப்பிட்டு இருக்கும். மேலும் அந்த கடிதத்துடன் ஒரு ஸ்கிராட்ச் கூப்பன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த கூப்பனை ஸ்கிராட்ச் செய்து அதில் உள்ள குறியீடுகளை அதில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறப் பட்டிருக்கும். அதை நம்பி பொதுமக்கள் அந்த கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும் போது எதிர்முனையில் பேசும் நபர், பரிசு பொருட்களை அனுப்புவதற்கு ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு வரிகள் செலுத்த வேண்டும் என்று கூறுவார்கள். இதை நம்பிய பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு ஆன்லைன் மூலமாக பணத்தை செலுத்துவார்கள்.
ஆனால் பணத்தை பெறும் நபர், கைப்பேசியை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு தொடர்பை துண்டித்து விடுவார். இதன் பின்னரே பணம் செலுத்திய பொது மக்களுக்கு தங்களிடம் பணம் மோசடி செய்யப் பட்டிருப்பது தெரியவரும். எனவே இது போன்ற மோசடிகளில் இருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள எச்ச ரிக்கையுடனும், விழிப்புடனும், இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.