புதிய சாலை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
தென்காசி அருகே புதிய சாலை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தென்காசி அருகே புதிய சாலை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
தென்காசி அருகே உள்ள கடபோகத்தி ஊரிலிருந்து குபேரப்பட்டணம் வழியாக மேலப்பாவூர் வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனை சரி செய்து புதிய சாலை அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதிய சாலை அமைத்து தரக்கோரி நேற்று இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மக்கள், சமுதாய தலைவர்கள் குத்தாலிங்கம், மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் பா.ஜ.க. ஒன்றிய தலைவர் மாரியப்பன், வக்கீல் கணபதி உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரிய பெரிய கற்களை சாலையில் போட்டு வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு போட்டு வைத்து இருந்தனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்த தகவல் அறிந்ததும் தென்காசி தாசில்தார் ஆதிநாராயணன், போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன், குற்றாலம் இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் கீழப்பாவூர் யூனியன் அலுவலர்கள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்கள். அதில் இன்னும் 45 நாட்களில் சாலை அமைத்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.