கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய அனுமதி மறுப்பு:சப்-கலெக்டர் உரிய விசாரணை நடத்தாததை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல்செஞ்சி அருகே பரபரப்பு
செஞ்சி அருகே கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக, சப்-கலெக்டர் உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறி, பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செஞ்சி
செஞ்சியை அடுத்த சத்தியமங்கலத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய ஒருதரப்பினர் அனுமதி மறுத்துவருவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, கடந்த 23-ந்தேதி விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் சத்தியமங்கலம் ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். இப்பிரச்சினை தொடர்பாக நேற்று காலை திண்டிவனம் சப்-கலெக்டர் ரவி தேஜா கட்டா, சத்தியமங்கலம் கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி சென்றார்.
சாலை மறியல்
இந்நிலையில், சப்-கலெக்டர் ஒருசிலரிடம் மட்டும் விசாரித்து சென்றுவிட்டார், பாதிக்கப்பட்ட எங்கள் தரப்பில் விசாரணை மேற்கொள்ளவில்லை என்று கூறி, பாதிக்கப்பட்ட மக்கள், சப்-கலெக்டரின் விசாரணை முறையை கண்டித்து, நேற்று மதியம் திடீரென சத்தியமங்கலத்தில் செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுப்பற்றி அறிந்த செஞ்சி தாசில்தார் நெகருன்னிசா, சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், இந்த பிரச்சினை தொடர்பாக சமாதான கூட்டம் நடத்தி தீர்வு காணலாம் என்று அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் மறியலை கைவிட்டனர்.
அறநிலையத்துறைக்கு சொந்தமானது
பின்னர், மாலையில் செஞ்சி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம், தாசில்தார் நெகருன்னிசா தலைமையில் நடைபெற்றது. இதில், பிரச்சினைக்கு உரிய சிவன் கோவில், இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமானது என்றும், எனவே அதன் சாவி, அவர்களிடம் இருந்து பெறப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையினரிடம் ஒப்படைக்கப்படும்.
அதன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தாசில்தார் நெகருன்னிசா தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக கோவில் சாவியும், ஒரு தரப்பினரிடம் இருந்து பெற்பட்டது.
இந்த சம்வத்தால் செஞ்சி பகுதியில் பரபரப்பு நிலவியது.