காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x

பேரணாம்பட்டு அருகே அடிப்படை வசதிகள் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

புறக்கணிப்பு

பேரணாம்பட்டு ஒன்றியம் ராஜக்கல் ஊராட்சியை சேர்ந்த சங்கராபுரம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வடமலைபுரம் பகுதியிலுள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து சங்கராபுரம் கிராமத்திற்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பல மாதங்களாக அடிப்படை வசதிகளான தெருவிளக்குகள் பராமரிப்பது, கழிவு நீர் கால்வாய் தூர் எடுப்பது ஆகிய பணிகள் மேற்கொள்வதில் ஊராட்சி மன்ற தலைவர் கருணாகரன் என்பவர் தனக்கு உள்ளாட்சி தேர்தலில் வாக்காளிக்காததை கூறி புறக்கணித்து வந்ததாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இது குறித்து சங்கராபுரம் கிராம மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம், தங்கள் கிராமம் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டு வருவதாக முறையிட்டனர்.

இந்தநிலையில் கடந்த 15 நாட்களாக சங்கராபுரம் கிராமத்தில் மேடான பகுதிக்கு குடிநீர் கிடைக்க வில்லை. மேலும் ஊர் திருவிழாவிற்கும் குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த சங்கராபுரம் கிராம மக்கள் காலி குடங்களுடன் மேல்பட்டி- கடாம்பூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் வரிசையாக நின்றன. இது குறித்து தகவலறிந்த மேல்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஊராட்சி தலைவர் கருணாகரன், ஒன்றிய கவுன்சிலர் அபிராமி ஆகியோரை வரவழைத்தனர்.

இதனையடுத்து ஊராட்சி தலைவர் கருணாகரன் குடிநீர் குழாயில் அடைப்புகள் உள்ளதால், அதனை சீரமைத்து கேட் வால்வு பொருத்தி உடனடியாக குடிநீர் வழங்குவதாக உறுதியளித்தார். இதனை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story