தண்ணீர் வெளியேறாததால் பொதுமக்கள் சாலை மறியல்


தண்ணீர் வெளியேறாததால் பொதுமக்கள் சாலை மறியல்
x

கலசபாக்கம் அருகே புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் வெளியேறாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் வெளியேறாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கழிவுநீர் கால்வாய்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே புதுப்பாளையம் யூனியனுக்குட்பட்ட காஞ்சி பாணுநகர் பகுதியில் நெடுஞ்சாலை துறை மூலம் சாலை அகலப்படுத்தப்பட்டு அதன் அருகில் கழிவுநீர் கால்வாயும் அமைக்கப்பட்ட வருகின்றன.

இந்த நிலையில் நேற்று கோடை மழையின் காரணமாக புதிதாக கட்டப்பட்டு வரும் கால்வாயில் தண்ணீர் வெளியேறாமல் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் இரவு முழுவதும் அவதிப்பட்டனர்.

சாலை மறியல்

இதனை கண்டித்து இன்று போளூரில் இருந்து செங்கம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த கடலாடி இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம். அதுவரை கலைந்து செல்ல மாட்டோம் என கூறினர்.

பின்னர் இன்ஸ்பெக்டர் கண்டிப்பாக இன்னும் ஒரு மணி நேரத்தில் நெடுஞ்சாலை துறையை சேர்ந்த அதிகாரிகளை வரவைக்கிறேன் என்று உறுதி அளித்தார். அதன் பிறகு மறியலை கைவிட்டனர்.

வீட்டுக்குள் தண்ணீர்

இதன் பின்னர் உதவி கோட்ட பொறியாளர் கோவிந்தசாமி, உதவி பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் அங்கு வந்தனர்.

அப்போது அங்கிருந்த மக்கள். எங்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்கிறீர்கள். மழை தண்ணீரும் வீட்டின் கழிவுநீரும் வெளியில் செல்ல வேண்டும் என்பதற்காகவே கட்டப்பட்ட கால்வாயில் ஒரு நாள் மழை தண்ணீரே வெளியில் போக முடியாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது.

தொடர்ந்து மழை பெய்தால் எங்களின் வீட்டிற்குள் தான் தண்ணீர் வரும் என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து உதவி கோட்ட பொறியாளர் கால்வாய் அனைத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் உதவி பொறியாளரை அழைத்து உடனடியாக எங்கெல்லாம் தாழ்வான பகுதியாக உள்ளதோ அந்த இடங்களில் கான்கிரீட் மூலம் மேலே தூக்கி தண்ணீர் செல்வது போல் உடனடியாக பணியை மேற்கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டார்.

இதன் பின்னர் அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

3 காலம்.


Next Story