குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்
ராஜபாளையம் நகராட்சி பகுதி பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் அய்யனார் கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வாரத்தில் ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட நிலையில் சமீப காலமாக 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜபாளையம் நகராட்சி 9-வது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. இதுகுறித்தும் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் சம்மந்தபுரம்-முடங்கியார் சாலையில் மழையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி இன்னும் 2 தினங்களுக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்