மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல்
அருப்புக்கோட்டையில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 100-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் நகர் முழுவதும் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனை சரி செய்ய 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் அண்ணா சிலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 3 நாட்களாக எங்கள் பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளதாக கூறி அண்ணா சிலை பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் மின் இணைப்பு கொடுக்கப்படும் என கூறியதின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல் மேலரத வீதியிலும், மதுரை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், அதிகாரிகளும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டங்களால் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.