வைத்தியநாத சுவாமி கோவிலில் மேற்கூரையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
வைத்தியநாத சுவாமி கோவிலில் மேற்கூரையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வைத்தியநாத சுவாமி கோவில்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட திருமழப்பாடி கிராமத்தில் வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோவிலில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் கோவிலின் முன்புறமும், உள்ளேயும் மேற்கூரை அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் அந்த மேற்கூரைகளை கோவில் ஊழியர்கள் நேற்று அகற்றி கொண்டு இருந்தனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் மேற்கூரையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திருமானூரில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த திருமானூர் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கோவிலின் மேற்கூரையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.
இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.