குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
தா.பழூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இருகையூர் ஊராட்சியை சேர்ந்த கோட்டியால் மேலத்தெரு பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக ஊராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் இருந்த குளத்திலும் தூர் வருவதற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. குளிப்பதற்கும், குடிப்பதற்கும், கால்நடைகளை பராமரிப்பதற்கும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் வினியோகம் செய்யப்படாத நிலையில் தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைக்கும்படி கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி ஆத்திரம் அடைந்த நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தா.பழூர்-விளாங்குடி சாலையில் கோட்டீயால் பாண்டிபஜார் பகுதியில் கையில் காலி குடங்களை வைத்துக்கொண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊரக வளர்ச்சி துறை சார்பில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவை உடனடியாக தீர்த்து வைக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.