பாதை அடைக்கப்பட்டதாக கூறி ஓமலூர் தாலுகா அலுவலகத்துக்கு ஆடு, மாடுகளுடன் வந்தவர்களால் பரபரப்பு
பாதை அடைக்கப்பட்டதாக கூறி ஓமலூர் தாலுகா அலுவலகத்துக்கு ஆடு, மாடுகளுடன் வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர்:
பாதை அடைப்பு
ஓமலூரை அடுத்த தாரமங்கலம் ஒன்றியத்தில் கருக்கல்வாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கரட்டுகாடு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாய கூலி தொழிலாளர்கள். இந்தநிலையில் பிரதான சாலையில் இருந்து குடியிருப்புகளுக்கு செல்வதற்காக மண் சாலையை, அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் மண்கொட்டி அடைத்துள்ளதாக தெரிகிறது.
இதனால் அந்த 5 குடும்பத்தினர் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு குடியிருப்புகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல முடியவில்லையாம்.
ஆடு, மாடுகளுடன்...
இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஓமலூர் தாசில்தார், மேட்டூர் உதவி கலெக்டர், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பாதை கேட்டு மனு கொடுத்துள்ளனர். அப்படி இருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஆடு, மாடுகளுடன் ஓமலூர் தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிலத்தை அளவீடு செய்து பாதை சரிசெய்து தரப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.