பாதாள சாக்கடை மேன்கோல் வழியாக வெளியேறும் கழிவுநீரால் தீவுபோல் மாறிய சுனாமி நகர் துர்நாற்றத்தால் 12 ஆண்டுகள் தவிப்பதாக மக்கள் புகார்


பாதாள சாக்கடை மேன்கோல் வழியாக வெளியேறும் கழிவுநீரால் தீவுபோல் மாறிய சுனாமி நகர் துர்நாற்றத்தால் 12 ஆண்டுகள் தவிப்பதாக மக்கள் புகார்
x

பாதாள சாக்கடை மேன்கோல் வழியாக வெளியேறும் கழிவுநீரால் சுனாமி நகர் தீவுபோல் மாறி இருக்கிறது.

கடலூர்

கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகர் காளியம்மன் கோவில் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் மட்டும் 3 இடங்களில் பாதாள சாக்கடை மேன்கோல் அமைந்துள்ளது. இதில் 2 மேன்கோல் வழியாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. அதனை சரி செய்யக்கோரி அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தும், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.

இதனால் தற்போது மின் மோட்டாரில் இருந்து தண்ணீர் வெளியேறுவது போல், அதில் இருந்து கழிவுநீர் ஆறாக ஓடி, அருகில் உள்ள வீடுகளை சுற்றிலும் குளம்போல் தேங்கி நிற்கிறது. தெருவில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு கழிவுநீர் தேங்கி உள்ளது. அதில் அதிகளவில் கொசுக்களும் உற்பத்தியாகியுள்ளது. இதனால் இரவு நேரத்தில் கொசுத்தொல்லையால் தூக்கத்தை தொலைக்கும் அப்பகுதி மக்கள், பகலில் துர்நாற்றத்தால் வீடுகளில் இருக்க முடியாமல் அல்லல்படுகின்றனர்.

தொற்று நோயால் பாதிப்பு

உதாரணமாக ஒரு வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் வீசும் துர்நாற்றத்தையே தாங்கிக் கொள்ள முடியாத நிலையில், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதாள சாக்கடை வழியாக வெளியேறும் ஒட்டுமொத்த கழிவுநீரால் ஏற்படும் கடும் துர்நாற்றத்துக்கு மத்தியில் வசித்து வருகின்றனர். இதனால் அவர்கள் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகளவில் கழிவுநீர் வெளியேறும் சமயங்களில் வீடுகளில் இருக்க முடியாமல், அருகில் உள்ள உறவினர் வீடுகளுக்கு சென்று தங்குகின்றனர்.

மேலும் கழிவுநீர் வெளியேறும் இடத்தின் அருகிலேயே அங்கன்வாடி மையமும் அமைந்துள்ளது. கடும் துர்நாற்றம் வீசுவதால், அந்த அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுக்கின்றனர்.

குடலை புரட்டும் நாற்றம்

இதுதொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், தானே புயலுக்கு முன்பு வரை பாதாள சாக்கடை மேன்கோல் வழியாக சிறிதளவு கழிவுநீர் வெளியேறிக் கொண்டிருந்தது. ஆனால் அதன் பிறகு கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக மோட்டாரில் தண்ணீர் வெளியேறுவது போல், வெளியேறிக்கொண்டே இருக்கிறது. குடலை புரட்டும் துர்நாற்றத்துக்கு மத்தியில் தான் நாங்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம்.

வீடுகளில் ஒருவேளை சாப்பாடு கூட எங்களால் நிம்மதியாக சாப்பிட முடியவில்லை. அழுகிய முட்டை எந்தளவுக்கு நாற்றம் வீசுமோ, அதைவிட பல மடங்கு துர்நாற்றம் வீசுகிறது. தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீர் வழியாக நடந்து செல்லும் மக்களின் கால்களில் கொப்பளங்கள் போல் புண்கள் வந்துள்ளது. வசிக்க வேறு இடம் இல்லாததால், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் இங்கேயே வசிக்கிறோம். ஒவ்வொரு தேர்தலின் போதும், ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்கள் பாதாள சாக்கடையை சரிசெய்வதாக கூறி தான் ஓட்டு கேட்கின்றனர். ஆனால் வெற்றி பெற்ற பிறகு அதனை சரிசெய்ய கூறும் போது, எங்களை மதிப்பது கூட கிடையாது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தே ஓய்ந்து விட்டோம். எங்களுக்கு இதுவரை எந்தவித நிரந்தர தீர்வும் காணப்படவில்லை. எனவே இனியாவது பாதாள சாக்கடை மூடியை சரி செய்து, கழிவுநீர் வெளியேறாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story