வருசநாட்டில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை


வருசநாட்டில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 27 July 2023 2:30 AM IST (Updated: 27 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

வருசநாட்டில் பள்ளி, கோவில்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தேனி

வருசநாட்டில் பள்ளி, கோவில்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கலெக்டர் ஆய்வு

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, கடமலை-மயிலை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நேற்று ஆய்வு செய்தார். அப்போது சிங்கராஜபுரம், வருசநாடு உள்ளிட்ட கிராமங்களில் சீரமைப்பு பணிகள் முடிந்த நூலகம், அங்கன்வாடி, சமுதாயக்கூடம், சமையலறை கட்டிடங்களை பார்வையிட்டார். மேலும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கான உணவின் தரம் மற்றும் வருகை பதிவேடு, கற்றல் திறன் போன்றவை குறித்து பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அதன்படி, பசுமலைத்தேரி கிராமத்தில் கலெக்டர் ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், கிராமத்தில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து குடிநீர் வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க ஒன்றிய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

டாஸ்மாக் கடை

வருசநாடு கிராமத்தில் டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்த பொதுமக்கள் சிலர், அங்கு வந்த கலெக்டரின் வாகனத்தை நிறுத்தினர். அப்போது டாஸ்மாக் கடை அருகே பள்ளி மற்றும் கோவில்கள் இருப்பதை கலெக்டரிடம் சுட்டிக்காட்டிய பொதுமக்கள், அந்த கடையை அகற்ற வேண்டும் அல்லது வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வருசநாடு பஞ்சம்தாங்கி கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அப்போது பொதுமக்களிடம் பேசிய கலெக்டர், டாஸ்மாக் கடை விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதேபோல் பஞ்சம்தாங்கி கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்த ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மதுமதி, செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய ஆணையாளர்கள் இளங்கோவன், பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

முன்னதாக சிங்கராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தபோது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் வருசநாடு-சிங்கராஜபுரம், ஒட்டணை-சிங்கராஜபுரம் ஆகிய 2 சாலைகளும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அதனால் பொதுமக்கள் நாளுக்குநாள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே முதலில் தார் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அதிகாரிகள் அவரிடம் பேசி சமரசம் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story