பொதுமக்கள் திரண்டதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒத்திவைப்பு
திருநாகேஸ்வரத்தில் பொதுமக்கள் திரண்டதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டது.
திருவிடைமருதூர்,
திருநாகேஸ்வரத்தில் பொதுமக்கள் திரண்டதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டது.
நாகநாத சாமி கோவில்
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்களில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. குறிப்பாக மடவிளாகம், தோப்புத் தெரு, மணல்மேட்டுத் தெரு ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் வசிக்கும் பலர் கோவிலுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு நீண்ட காலமாக வரி செலுத்தாத 39 வீடுகளை அப்புறப்படுத்த போவதாக நேற்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
பொதுமக்கள் குவிந்தனர்
அதன் பேரில் வருவாய்துறை அதிகாரிகள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் போலீசார் என 100-க்கும் மேற்பட்டோர் நாகநாத சாமி கோவிலுக்கு காலை முதல் வர தொடங்கினர். பொக்லின் எந்திரம் தயார் நிலையில் இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மணல் மேட்டு தெருவை சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் மணல்மேடு தெருவுக்கு செல்லும் வாயில் புறமான திருநாகேஸ்வரம் தெற்கு வீதியில் குவிந்தனர்.
ஒத்திவைப்பு
இதனால் நேற்று கோவிலுக்கு சொந்தமான இடங்களில் வரி கட்டாமல் இருக்கும் குடியிருப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்திருந்த இந்து சமய அறநிலைத்துறையினர் தங்களது ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை சில நாட்களுக்கு ஒத்தி வைத்தனர்.இதைத்தொடர்ந்து திருநாகேஸ்வரம் தெற்கு வீதியில் குவிந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.