கடலில் பால் ஊற்றி சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு
கடலில் பால் ஊற்றி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தரங்கம்பாடி துறைமுகம் அருகே மீன் இறங்கு தளத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அவர்களது குடும்பத்தினர் யாகங்கள் வளர்த்து, தர்ப்பணம் கொடுத்து, கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மீனவ கிராம மக்கள் கடற்கரையில் இருந்து மவுன ஊர்வலமாக புறப்பட்டு சென்று நினைவு தூணில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். பின்னர் சுனாமியால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்த பழைய ரெயிலடியில் படையல் இட்டு அஞ்சலி செலுத்தினர். சந்திரபாடி, சின்னங்குடி, சின்னமேடு உள்ளிட்ட இடங்களிலும் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தரங்கம்பாடியில் கடைகள் அடைக்கப்பட்டது. வேன், கார், ஆட்டோக்கள் ஓடவில்லை. நிகழ்ச்சியில் தரங்கம்பாடி தலைமை மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், பா.ஜனதா மாவட்ட தலைவர் அகோரம், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், அன்பழகன், தகவல் தொழில்நுட்ப அணி தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், ஜெனார்த்தனம் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.