மரைக்கா கோரையாற்றை தூர்வார வேண்டும்; ஆகாயத்தாமரைகளுடன் வந்து பெண்கள் மனு
திருத்துறைப்பூண்டி அருகே ஓவர்குடி கிராமத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் மரைக்கா கோரையாற்றை தூர்வார வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஆகாயத்தாமரைகளுடன் வந்து பெண்கள் மனு அளித்தனர்.
திருத்துறைப்பூண்டி அருகே ஓவர்குடி கிராமத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் மரைக்கா கோரையாற்றை தூர்வார வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஆகாயத்தாமரைகளுடன் வந்து பெண்கள் மனு அளித்தனர்.
ஓவர்குடி மரைக்கா கோரையாறு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஓவர்குடி கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த கிராம பெண்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஓவர்குடி கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தின் வழியாக செல்லும் மரைக்கா கோரையாற்று தண்ணீர் ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் பாசிகளால் நிறம் மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அந்த பகுதியை சேர்ந்த மக்கள் உடல்நலம் பாதிக்கப்படுகிறார்கள்.
தோல் வியாதி
கைப்பம்பு இல்லாததால் ஆற்று நீரை பயன்படுத்த வேண்டி உள்ளது. இந்த நிலையில் ஆற்று தண்ணீரை பயன்படுத்தினால் உடலில் அரிப்பு மற்றும் தோல் வியாதி ஏற்படுகிறது. இந்த ஆறு கள்ளிக்குடி போன்ற ஊர்களுக்கு பாசன ஆறாகவும், நேமம், வங்கநகர், எழிலூர், திருக்களார் உள்ளிட்ட பகுதிகளுக்கு வடிகாலாகவும் இருந்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக மரைக்கா கோரையாறு தூர்வாரப்படாமல் உள்ளது. எனவே இந்த ஆற்றில் உள்ள ஆகாயத்தாமரைகள், ஆற்று பாசிகளை அகற்றி தூர்வார வேண்டும். மேலும் ஓவர்குடியில் குடிநீர் 2 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது. குடிநீர் தடையின்றி வழங்குவதுடன், கைப்பம்பு வசதியும் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.