போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசாரை நியமிக்க வேண்டும்- பொதுமக்கள்
லெட்சுமாங்குடி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லெட்சுமாங்குடி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நான்கு வழிச்சாலை
கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி பாலத்தை மையமாக கொண்டு மன்னார்குடி, திருவாரூர், வடபாதிமங்கலம், கொரடாச்சேரி ஆகிய ஊர்களுக்கு செல்லும் நான்கு வழிச்சாலை அமைந்து உள்ளது. இந்த நான்கு வழிச்சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
லெட்சுமாங்குடி நான்கு வழிச்சாலையின் முகப்பு பகுதியில் கடைவீதி உள்ளதால் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். இந்த நான்கு வழிச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் பல மணி நேரம் சிக்கி தவிக்க வேண்டி உள்ளது.
தாறுமாறாக செல்லும் வாகனங்கள்
நான்கு வழிச்சாலையில் செல்லும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவது, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊர்க்காவல் படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் தற்போது அங்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் யாரும் ஈடுபடுவது இல்லை. இதனால் அங்கு வாகனங்கள் தாறுமாறாக பயணிப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, லெட்சுமாங்குடி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.