ஆதிரெங்கம்- தலைக்காடு சாலை சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்குமா? - பொதுமக்கள்
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம்- தலைக்காடு சாலை சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்குமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம்- தலைக்காடு சாலை சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்குமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சிதிலம் அடைந்த சாலை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம்- தலைக்காடு இடையேயான சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது. இந்த சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை.
ஆதிரெங்கம் ஊராட்சியில் இருந்து தலைக்காடு வழியாக கொறுக்கை ஊராட்சி பகுதிகளை இணைக்கும் இந்த பிரதான சாலை எப்போது சரி செய்யப்படும்? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
காயம் அடையும் வாகன ஓட்டிகள்
கிராம பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய அவசர தேவைகளுக்கு இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து காயம் அடையும் சூழல் உள்ளது. சில இடங்களில் சாலை இருப்பதே தெரியாத அளவுக்கு சிதிலம் அடைந்து காணப்படுகிறது.
நாகை கிழக்கு கடற்கரை சாலையையும், வேதை சாலையையும் இந்த சாலை இணைக்கிறது. மேலும் ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம், சேகல் விதைப்பண்ணை, கொறுக்கை கால்நடை பண்ணை, ஆரம்ப சுகாதார நிலையம், கொறுக்கை பாலிடெக்னிக் கல்லூரி போன்ற இடங்களுக்கு சென்று வருவதற்கும் இதுவே பிரதான சாலை ஆகும்.
மத்திய அரசு திட்டத்தில் தேர்வு
இந்த சாலையை சீரமைப்பது குறித்து பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஊராட்சி மன்ற தலைவர்கள் வீரசேகரன் (ஆதிரெங்கம்), ஜானகிராமன் (கொறுக்கை), ராஜேஸ்வரி ரங்கசாமி (சேகல்) மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
7.8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பிரதான சாலை மத்திய அரசின் பிரதம மந்திரி கிராம சிவராஜ் யோஜனா திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சீரமைப்பு பணிகள் தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.
சாலை மறியல் போராட்டம்
விரைவாக இந்த சாலையை சீரமைப்பதற்கான பணி ஆணை கிடைக்க மத்திய அரசுக்கு, மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும். இல்லையேல் வேறொரு திட்டத்தில் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சாலை பணிகளை விரைவில் தொடங்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாகவும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.