மக்கள் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை


மக்கள் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை
x

மக்கள் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என பத்மநாபபுரம் நகராட்சி கூட்டத்தில் அதிகாரிகள் மீது கவுன்சிலர் குற்றம்சாட்டினார்

கன்னியாகுமரி

தக்கலை:

மக்கள் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என பத்மநாபபுரம் நகராட்சி கூட்டத்தில் அதிகாரிகள் மீது கவுன்சிலர் குற்றம்சாட்டினார்.

நகராட்சி கூட்டம்

பத்மநாபபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் அருள் சோபன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் உண்ணிகிருஷ்ணன், கமிஷனர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர் வினோத்குமார் இருக்கையில் இருந்து எழுந்து கூட்டத்தின் மத்திய பகுதிக்கு வந்தார். பின்னர் அதிகாரிகளை பார்த்து 'நகராட்சியில் இதுவரை நடந்த கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலம் சார்ந்த ஏதாவது ஒரு தீர்மானம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளதா?. பொதுமக்கள் தரப்பில் வரியை குறைப்பது சம்மந்தமாக அளிக்கப்பட்ட புகார்கள் மீது நீண்ட நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிய குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. வீடுகளுக்கு போடப்பட்ட வணிக வரியை வீட்டு வரியாக மாற்றுவதற்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு பதில் கூறிய பிறகு கூட்டம் நடத்தலாம்' என்றார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பேசிய தலைவர் அருள் சோபன் அதிகாரிகளை பார்த்து ' பொதுமக்களின் மனுக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை' என கேட்டார்.

ஒரு வாரத்தில் தீர்வு

இதற்கு பதிலளித்த கமிஷனர் லெனின் கூறும்போது, 'நகராட்சியில் நிரந்தரமாக என்ஜினீயர் இல்லை. ஊழியர்களுக்கு வரி வசூல் சம்மந்தமாக பணி சுமை அதிகமாக உள்ளது. இதனால் தான் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒருவாரத்தில் பொதுமக்களின் மனுக்கள் குறித்து தீர்வு ஏற்படுத்தப்படும்' என்றார்.

இதுபோல் தக்கலை அரசு ஆஸ்பத்திரி முன்புறம் ஒரு தரப்பினர் பூங்கா அமைத்ததால் ஏற்பட்ட பிரச்சினை குறித்து துணைத்தலைவர் உண்ணிகிருஷ்ணன், கவுன்சிலர் நாகராஜன் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தலைவர் அருள் சோபன், 'அந்த இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமானதாகும். அதை அவர்கள் பார்த்து கொள்வார்கள்' என்றார்.

புதிய பஸ் நிலையம்

இதனையடுத்து கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. அதில் தக்கலை அண்ணாசிலை அருகில் உள்ள கலையரங்கத்தை பழுதுபார்ப்பது. சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி தக்கலை காமராஜர் பஸ் நிலையத்தை இடித்துவிட்டு புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.6.50 கோடி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பணிகள் மேற்கொள்ள முன்னேற்பாடாக அங்கு செயல்பட்டு கொண்டிருக்கும் கடைகளை காலிசெய்ய அறிவுறுத்துவது. தற்காலிக பஸ் நிலையம் எங்கு ஏற்படுத்துவது? என்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.


Next Story