சுரங்கம் போல் தோண்டி குடிநீர் பிடிக்கும் மக்கள்


சுரங்கம் போல் தோண்டி குடிநீர் பிடிக்கும் மக்கள்
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திறப்பு விழா காணாமலேயே பாழடைந்த கட்டிடம். சுரங்கம் போல் தோண்டி குடிநீர் பிடிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கடலூர்

விருத்தாசலம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில், நிலவும் மக்களின் பிரச்சினைகள் குறித்து வாரந்தோறும் வார்டுகள் வாரியாக அலசி வருகிறோம். அந்த வகையில் இன்று(புதன்கிழமை) 23-வது வார்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

வெள்ளத்தால் பாதிக்கும் ஏனாதிமேடு

23-வது வார்டில் பூந்தோட்டம் காலனி, பூதாமூர், ஏனாதி மேடு, சி.என்.சி.நகர், ஆர்.கே.ஆர். நகர், பூதாமூர் பழைய காலனி, பழனி முருகன் நகர், சாய்ராம் நகர் உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன. இந்த வார்டில் 1,233 ஆண்கள், 1,311 பெண்கள் என மொத்தம் 2545 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நகராட்சி நடுநிலைப்பள்ளி, நகராட்சி தொடக்கப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆகியவை அமைந்துள்ளன.

வார்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய வீதிகளில் மட்டுமே மழைநீர் வடிகால் உள்ளது. மற்ற தெருக்களில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது. மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் ஏனாதிமேடு பாதிக்கப்படும். இதன் காரணமாக ஏனாதிமேட்டை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்றும், வளர்ச்சி திட்ட பணிகள் செய்யவில்லை என்றும் அப்பகுதி மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. மழைக்காலத்தில் ஏனாதிமேடு பகுதி பாதிக்காமல் இருக்க தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை ஆகும்.

சுரங்கம் போன்று தோண்டி...

பூதாமூர் பழைய காலனியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சிலர், தங்களது வீடுகளில் மின் மோட்டாரை பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சி விடுவதால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகள் முன்பு செல்லும் குடிநீர் குழாய் வரை சுரங்கம் போன்று பள்ளம் தோண்டி தண்ணீரை பிடித்து வருகிறார்கள். சிலர் சாலையை குடைந்து குடிநீர் பிடிப்பதால் எப்போது வேண்டுமானாலும் சாலை சரிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே குடிநீரை உறிஞ்ச பயன்படுத்தப்படும் மின் மோட்டார்களை பறிமுதல் செய்து அனைவருக்கும் சீரான குடிநீர் கிடைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

பாழடைந்த கட்டிடம்

பூதாமூர் நல்லேரிகுளம் அருகில் பாழடைந்து கிடக்கும் கழிவறை கட்டிடம் மற்றும் கரும காரிய கூடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். காட்சி பொருளாக கிடக்கும் மினி குடிநீர் தொட்டிகளையும் சரி செய்ய வேண்டும்.

பூந்தோட்டம் காலனியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கழிவறை, குளியலறை மின்மோட்டார் வசதியுடன் கூடிய சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. ஆனால் இக்கட்டிடத்திற்கு மின் இணைப்பு தராததால் திறப்பு விழா காணாமல் பல ஆண்டுகளாக காட்சி பொருளாக கிடந்து தற்போது பாழடைந்த கட்டிடமாக மாறிவிட்டது. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் விரையமாகி உள்ளது. இந்த சுகாதார வளாகத்தை இடித்து அகற்றி விட்டு புதிய சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும். அந்த பகுதியில் உள்ள குட்டையை தூர்வாரி, மழைநீரை சேகரிக்க வழிவகை செய்ய வேண்டும்.

மேலும் வார்டில் உள்ள குறைகள் குறித்து மக்கள் கூறியதாவது:-

ஆக்கிரமிப்பு

ஏனாதிமேடு பன்னீர்செல்வம்: இது நகராட்சிக்குட்பட்ட பகுதி என்றாலும் நெல், கரும்பு பயிர்களை சாகுபடி செய்து வருகிறோம். கரும்பை வெட்டி வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்வதற்கு போதிய சாலை வசதி இல்லை. குறுகலாக உள்ள சாலையை கூட தனிநபர் ஆக்கிரமித்து குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சரி செய்து தர வேண்டும்.

கொசு மருந்து அடிக்க...

பூந்தோட்டம் பெரியார் நகர் ராமச்சந்திரன்:-

கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி தருவதுடன் மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும். தெருக்களில் சிமெண்டு சாலையும், மின்விளக்கு வசதியும் செய்து தர வேண்டும். கழிவு நீர் செல்லும் வகையில் புதிய பாலம் அமைத்து தர வேண்டும். நல்லேரியில் படித்துறை அமைத்து தர வேண்டும்.

காணாமல் போன குட்டைகள்

திரவுபதி அம்மன் கோவில் தெரு ஜெய்கணேஷ்:-

எங்கள் வார்டு பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சேமிப்பு கிடங்கு அமைத்து தர வேண்டும். பூதாமூர் மணிமுக்தாற்றில் ரூ.16 கோடியில் தடுப்பணை அமைக்க நிதி ஒதுக்கி பல ஆண்டுகளாகியும், கிடப்பில் போடப்பட்டுள்ள இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். காணாமல் போன குட்டைகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தூர்வாரிட நடவடிக்கை எடுக்க வேண்டும். முனியப்பர் கோவில் அருகில் உள்ள பொதுசுகாதார வளாகத்தில் செப்டிக் டேங்க் நிரம்பி வழிந்து வருகிறது. இந்த கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நூற்றாண்டு கடந்த நகராட்சி நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

23-வது வார்டு கவுன்சிலர் சந்திரகுமார்(அ.தி.மு.க.):- நல்லேரிகுளம் ரூ.48 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டுள்ளது. திரவுபதி அம்மன் கோவில் தெருவில் மழைநீர் வடிகால் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சி.என்.சி. நகர், ஆர்.கே.ஆர்.நகர் பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்க நகர்மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். பூந்தோட்டத்தில் மழை நீர் வடிகால் வசதியுடன் கூடிய கால்வாய், சுகாதார வளாகம் கட்டித் தர வேண்டும் என நகர சபையில் கோரிக்கை வைத்துள்ளேன். பூந்தோட்டம் காலனி பின்புறம் உள்ள குட்டையை தூர்வார விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஏனாதிமேடு பகுதியில் வடிகால் வசதியுடன் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரப்படும். காலை, மாலை என இருவேளையும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வார்டு முழுவதும் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் நூலகமும், உடற்பயிற்சி கூடமும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். செட்டிகுளம் விரைவில் தூர்வாரப்படும். வார்டு முழுவதும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.


Next Story