வேலூரில் பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
பொங்கல் பண்டிகை பொருட்கள் வாங்குவதற்காக வேலூரில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
பொங்கல் பண்டிகை பொருட்கள் வாங்குவதற்காக வேலூரில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். காய்கறிகள் விலை மேலும் அதிகரித்தது.
பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து தங்கள் வீடுகள் முன்பு பல்வேறு வண்ணங்களில் கோலம் இட்டு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். அதன் பின்னர் பல்வேறு வகையான உணவுப்பொருட்களை சமைத்து குடும்பத்தினர், விருந்தினர்கள் சகிதமாக சாப்பிடுவார்கள். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேதாஜி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து காணப்பட்டது.
இந்த நிலையில் சில காய்கறிகளின் விலை மேலும் அதிகரித்து விற்பனையானது. குறிப்பாக மொச்சைக்காய், அவரைக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய், மாங்காய் உள்ளிட்டவற்றின் விலை நேற்று முன்தினம் விற்பனை செய்யப்பட்டதை விட ரூ.20 அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ மொச்சைக்காய் ரூ.80, அவரைக்காய் ரூ.80, முருங்கைக்காய், மாங்காய் ரூ.140 முதல், ரூ.150-க்கும், கத்தரிக்காய் ரூ.90-க்கும், தக்காளி, கேரட் ரூ.30-க்கும், வெங்காயம் ரூ.30 முதல் ரூ.35-க்கும், உருளைகிழங்கு ரூ.40, பூசணி, கருணை கிழக்கு ரூ.30 முதல் ரூ.35-க்கும் விற்பனையானது. சில்லரை காய்கறி விற்பனை கடைகள் மற்றும் மளிகை கடைகளில் இவற்றை விட கூடுதலாக ரூ.10 முதல் ரூ.20-க்கு காய்கறிகள் விற்கப்பட்டன.
குவிந்த பொதுமக்கள்
வேலூர் பெரியார் பூங்கா முதல் கோட்டை சுற்றுச்சாலையில் வரிசையாக லாரிகளில் கரும்புகள் விற்பனை செய்யப்பட்டன. ஒரு கட்டு கரும்பு ரூ.300 முதல் ரூ.400-க்கும், ஒரு ஜோடி கரும்பு ரூ.80-க்கும், அதேபோன்று மஞ்சள்குலை ரூ.40 முதல் ரூ.60-க்கும் விற்பனையானது.
பொங்கல் பொருட்கள் வாங்க வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் வேலூரில் குவிந்தனர். குறிப்பாக லாங்கு பஜார், மண்டித்தெரு, நேதாஜி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டன. பொதுமக்கள் பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள், வெல்லம், காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்கி சென்றனர்.