ரெயில், பஸ் நிலையங்களில் குவிந்த மக்கள்


ரெயில், பஸ் நிலையங்களில் குவிந்த மக்கள்
x

கிறிஸ்துமஸ்-பள்ளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக திண்டுக்கல்லில் ரெயில், பஸ் நிலையங்களில் மக்கள் குவிந்தனர். நள்ளிரவில் கொட்டும் பனியில் காத்திருந்தனர்.

திண்டுக்கல்

சொந்த ஊருக்கு பயணம்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கடந்த 16-ந்தேதி அரையாண்டு தேர்வு தொடங்கி நேற்று முன்தினம் நிறைவுபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையும், 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தினமும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அரையாண்டு விடுமுறை, பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால் வேலை, தொழில் உள்பட பல்வேறு விஷயங்களுக்காக வெளியூர்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர். அதேபோல் வெளியூர்களில் வசிக்கும் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று பலர் விடுமுறையை உற்சாகமாக கழிப்பார்கள்.

ரெயில் நிலையம்

எனவே வெளியூர்களில் வசிக்கும் உறவினர்களை தேடி செல்வோரும், விடுமுறையை தவறவிடுவது இல்லை. இதற்காக பெரும்பாலானோர் கடந்த மாதமே ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டனர். இதனால் திண்டுக்கல் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் டிக்கெட் காலியாக இல்லை. அதேபோல் தட்கல் டிக்கெட்டுகள் கூட கிடைப்பதில்லை.

இதனால் வேறுவழியின்றி முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்கின்றனர். இந்த முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம்பிடிப்பது பெரிய சிரமம் ஆகும். எனவே இரவு நேர ரெயில்களை தவிர்த்து, பகல்நேர ரெயில்களில் செல்வதற்காக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நேற்று காலையிலேயே பலர் குவிந்தனர்.

திண்டுக்கல் வழியாக சென்ற அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ரெயில் பெட்டிகளில் கழிப்பறை அருகிலும், படிக்கெட்டுகளிலும் நின்று கொண்டு பயணம் செய்தனர். மேலும் கூட்ட நெரிசலால் ஒருசிலர் 2 முதல் 3 ரெயில்களில் ஏற முயன்று தோற்ற சம்பவங்களையும் பார்க்க முடிந்தது.

பஸ் நிலையம்

இதேபோல் ரெயில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் நெரிசலுடன் பயணிக்க விரும்பாதவர்கள், பஸ்களில் சென்றனர். அதன்படி திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு காத்திருந்து மக்கள் பஸ்களில் சென்றனர். இந்த நிலையில் நேற்றும் காலையில் இருந்தே மக்கள் பஸ் நிலையத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர்.

இது மாலை நேரத்தில் அதிகமாகி இரவில் பஸ்நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. திண்டுக்கல்லில் இருந்து சென்ற அனைத்து பஸ்களும் நிரம்பி வழிந்தன. வெளியூர்களில் இருந்து திண்டுக்கல் வழியாக செல்ல வேண்டிய பஸ்களில் பல பஸ்கள், இரவில் திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு வராமல் சென்றன.

இதனால் வெளியூர் பஸ் கிடைக்காமல் விடிய, விடிய கடும் பனியில் பயணிகள் காத்திருந்த சம்பவமும் நடந்தது. அதேபோல் ஆன்மிக நகரான பழனிக்கு விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. வெளிமாவட்ட பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால், பஸ்கள் நிரம்பி வழிந்தன.


Next Story