கடலூர் சில்வர் பீச்சில் குடும்பத்தோடு குவிந்த பொதுமக்கள்
சித்ரா பவுர்ணமியையொட்டி கடலூர் சில்வர் பீச்சில் குடும்பத்தோடு பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் நிலா தெரியாததால் ஏமாற்றத்துடன் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டு சென்றனர்.
கடலூர்:
சித்ரா பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் தோன்றும் முழு நிலவை பார்த்து, பொதுமக்கள் நிலா சோறு சாப்பிடுவது வழக்கம். வீடுகளிலும், கோவில்களிலும், ஆற்றங்கரைகள், கடற்கரைகளிலும் பொதுமக்கள் குடும்பத்துடன் அமர்ந்து பேசி, தாங்கள் சமைத்த உணவை அனைவருக்கும் பரிமாறி உண்ணும் பழக்கம் தமிழர்களிடையே இன்றளவும் இருந்து வருகிறது.
அதன்படி சித்ரா பவுர்ணமியான நேற்று கடலூர் சில்வர் பீச்சுக்கு மாலை 4 மணிக்கே பொதுமக்கள் வர தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகமானது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் குடும்பம், குடும்பமாக சில்வர் பீச்சில் குவிந்தனர். பின்னர் அவர்கள் கடற்கரை மணலில் அமர்ந்து சீறி வந்த கடல் அலையை ரசித்தும், குளித்தும் மகிழ்ந்தனர்.
நிலா சோறு
தொடர்ந்து சிறிது நேரம் கடற்கரை மணலில் விளையாடினர். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி, தங்களின் பழைய நினைவுகளையும், கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த விதத்தையும் பெரியவர்கள் பேச, சிறியவர்கள் கேட்டுக்கொண்டனர். அதையடுத்து இரவில் நிலா சோறு சாப்பிடுவதற்காக நிலாவை பார்த்தனர். ஆனால் நிலா வெகு நேரமாகியும் வரவில்லை. மாறாக குளிர்ந்த காற்று வீசியது. லேசான சாரல் விழுந்தது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் தாங்கள் சமைத்து கொண்டு வந்த உணவை குடும்பம், குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டனர். சிலர் நிலா சோறு சாப்பிட வந்த எங்களை நிலா ஏமாற்றி விட்டதே என்று பேசிக்கொண்டனர். தொடர்ந்து சிறிது நேரம் அமர்ந்து பேசி விட்டு புறப்பட்டு சென்றனர்.