கிராமங்களில் தீப்பந்தங்களை ஏற்றி வைக்கும் பொதுமக்கள்
காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க கிராமங்களில் தீப்பந்தங்களை பொதுமக்கள் ஏற்றி வைக்கின்றனர்.
பந்தலூர்
பந்தலூர் சேரங்கோடு அருகே சிங்கோனா, படச்சேரி பகுதிகளில் பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளுக்குள் தினமும் காட்டு யானைகள் புகுந்து வருகின்றன. அப்பகுதியில் தெருவிளக்குகள் எரியாததால், காட்டு யானைகள் நின்றால் கூட தெரிவது இல்லை. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே, புதிதாக தெருவிளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தநிலையில் ஊருக்குள் காட்டு யானைகள் வராமல் இருக்கவும், வனவிலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும் இரவு நேரங்களில் கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றி வைக்கின்றனர். அதில் மண்எண்ணெய் ஊற்றி கம்பங்களில் கட்டி வைக்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தெருவிளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கி கிடக்கிறது. எனவே, புதிய தெருவிளக்குகள் பொருத்த வேண்டும் என்றனர்.