மின் இணைப்பு வழங்காததால் 20 ஆண்டுகளாக இருளில் வசிக்கும் மக்கள்
மின் இணைப்பு இல்லை... வீடுகளை சூழ்ந்த இருட்டு... என மக்களின் நிலை உள்ளது. மின் இணைப்பு வழங்காததால் பள்ளி மாணவர்கள் விளக்குகளை பயன்படுத்தி படிக்கும் நிலை காணப்படுகிறது. கூடலூர் எம்.ஜி.ஆர். நகரில் 20 ஆண்டுகளாக இருளில் வசிப்பதாக மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
கூடலூர்,
மின் இணைப்பு இல்லை... வீடுகளை சூழ்ந்த இருட்டு... என மக்களின் நிலை உள்ளது. மின் இணைப்பு வழங்காததால் பள்ளி மாணவர்கள் விளக்குகளை பயன்படுத்தி படிக்கும் நிலை காணப்படுகிறது. கூடலூர் எம்.ஜி.ஆர். நகரில் 20 ஆண்டுகளாக இருளில் வசிப்பதாக மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
மின் இணைப்பு
கூடலூர் சட்டமன்ற தொகுதியில் சட்டப்பிரிவு-17-ன் கீழ் கொண்டு வரப்பட்ட நிலம் உள்ளது. இதில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள், சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை நில பிரச்சினைக்கு முடிவு ஏற்படவில்லை. இந்தநிலையில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் முனீஸ்வரன் கோவில் பகுதியில் சட்டப்பிரிவு-17ன் கீழ் கொண்டுவரப்பட்ட நிலத்தில் ஏராளமான மக்கள் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.
இதனால் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை மின் இணைப்பு வழங்கப்பட வில்லை. இதன் காரணமாக இருளில் வசித்து வருகின்றனர். மேலும் அவர்களின் குழந்தைகள் இரவில் படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தங்களது வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
டீசலை பயன்படுத்தி விளக்குகள்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
வீடுகள் கட்டி 20 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகின்றோம். நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி செலுத்தி வருகிறோம். ஆதார், ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கவில்லை. இதனால் எங்கள் குழந்தைகளின் கல்வித்தரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால் விளக்குகளை எரிய வைக்க மண்எண்ணெய் பயன்படுத்தி வந்தோம். தற்போது ரேஷன் கடைகளில் மண்எண்ணெய்யும் வழங்குவதில்லை. ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் உள்ளவர்களுக்கு மட்டுமே ஒரு லிட்டர் மண்எண்ணெய் வழங்கப்படுகிறது. அதுவும் பற்றாக்குறை ஏற்படும் நேரங்களில், வீடுகளில் டீசல் மூலம் விளக்குகளை பயன்படுத்துவதால் பல்வேறு உடல் கோளாறுகளும் ஏற்படுகிறது. தேர்தல் காலங்களில் வாக்குறுதிகள் அளிக்கப்படுகிறது. ஆனால், நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.