இரவு நேரத்தில் நடமாடும் கரடியால் பொதுமக்கள் பீதி
இரவு நேரத்தில் நடமாடும் கரடியால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை டானிங்டன் பகுதியில் சாலையின் நடுவே கரடி உலா வந்தது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்து, சற்று தொலைவில் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தினர். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார், ஹாரனை ஒலிக்க செய்து கரடியை அங்கிருந்து விரட்டினர். பின்னர் கரடி அருகே இருந்த புதர் மறைவில் சென்று மறைந்தது. பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கரடிகள் நடமாட்டம் இருந்து வருகிறது. எனவே, அவை பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளதால், இவ்வாறு சுற்றித்திரியும் கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.